Wednesday, September 2, 2020

கடலை

 காராபூந்தியில்

தேடித் தேடி பொறுக்கும்

வேர்க்கடலை

அவள் !!! 

மழை

 கொஞ்சமாய் 

தூற வேண்டும்...

கொஞ்சமே கொஞ்சமாய்

நனைய வேண்டும்...

மீதத்தை

நாம் நம்முள்

நனைந்துகொள்வோம்

அன்பென்னும் மழையில்...

நனை

 


நனைகிறாள் அவள் 

மழையில்..

அவளால் நனைந்து 

கரைகிறேன் 

நான் என்னுள்..


கோழி

 போதும் எனக்கு 

என்றது கோழி

போதாது என்று 

மீண்டும் வைத்தாள்

அதன் தோழி..



நீர்க்குமிழி

 உடைந்து போன 

நீர்க்குமிழிகளாய்

சிதறிப்போன

கனவுகள்,

உன்னுடன் வாழ 

விரும்பியவை.



Friday, July 24, 2020

என் வாழ்க்கை

எந்தவொரு பிடிமானமும்
இல்லாமல் நகர்கிறது
காற்றில் பறக்கும்
கிழிந்த காகிதம்போல்
என் வாழ்க்கை.

Friday, June 17, 2016

தண்ணீர் - சிறுகதை


வணக்கம். இந்த சிறுகதை மதிப்பிற்குரிய மணி அண்ணாவின் நிசப்தம் வலைப்பூவில் அவரது மூன்றாம் நதி நாவலுக்கான போட்டியில் பங்குபெற எழுதியது. மற்றும் இது எனது முதல் கதை/சிறுகதை. நிசப்தத்தின் சிறுகதைப் போட்டியில் கலந்து கொண்டந்தை நினைத்துப் பெருமை அடைகிறேன். மகிழ்ச்சி அடைகிறேன். தங்கள் ஊக்கத்திருக்கும் உழைப்பிற்கும் என்றென்றும் பணிவான வணக்கங்கள். மணி அண்ணாவின் அனுமதியுடன் சிறுகதையின் முழு வடிவம் கீழே:




தண்ணீர் 


"யோவ் எப்படியாவது கொண்டு வந்துடுயா.." என்று ராமுத்தாய் கூறிக்கொண்டிருக்கும் பொழுதே, "என்னடி நான் என்னமோ சும்மா சுத்திட்டு வர்ற மாதிரி பேசுற... கிடைச்சா கொண்டு வரக்கூடாதுன்னு எனக்கு என்ன ஆசையா??" என்று கத்தினார் பொன்னுச்சாமி.

வெறுப்பாய் வீட்டை விட்டு வெளியேறினார். பொன்னுச்சாமி பழைய நினைவுகளை அசைபோட்டுக்கொண்டே நடந்தார்.  வரவர நிலைமை மிகவும் மோசமாகிக்கொண்டே செல்கின்றது.

ஊருக்குள் யாருமே இல்லை. எல்லோரும் அதிகாலையிலேயே கிளம்பியிருந்தனர். தினமும் இதே வேலையாகி விட்டது.

ஏதோ ஒரு நம்பிக்கையில் நேற்று சென்ற முட்டுக்காட்டிர்க்கே இன்றும் செல்கின்றார். அதோ அங்கு ஒரு பெரிய மேடு போல் தெரிகிறது. அவரது நடை மிகவும் வேகமானது. அந்த மேட்டின்மேல் ஏறிநின்று எட்டிப்பார்த்தார். கீழே அது தெரிந்தது. வெயில் தாக்கத்தால் சிறிது பிரதிபலித்தது. சுற்றும் முற்றும் பார்த்தார். சிறிது தூரத்தில் ஒரு பழைய வாலி ஒன்று கிடந்தது.

அதை எடுத்துக்கொண்டு அந்த பள்ளத்தில் இறங்கினார். கொஞ்சம் ஈரமாக இருந்த நிலத்தில் அந்த வாலியை வைத்து கொத்தி மண்ணை அகற்றினார். சிறிது சிறிதாக தண்ணீர் வெளிப்பட்டது.

அதைக்கண்டதும் மனம் துள்ளிக்குதித்தது. நேற்றைப்போலவே இன்றைக்கும் ஒரு குவளையாளவாவது தண்ணீர் கிடைத்தது. எடுத்துவிட்டு மேலே வந்தார். பதின் வயது சிறுமி ஒருத்தி அந்த தண்ணீரை பார்த்துக்கொண்டே இருந்தாள்.

"தாத்தா எனக்கு கொஞ்சம் தண்ணி குடுங்க தாத்தா.. வீட்டுல அம்மா ஒடம்ம்புக்கு முடியாம படுத்து இருக்காங்க.. அப்பா கூலிக்குப் போயிட்டாரு.. வேற எங்கயும் தண்ணி கெடைக்கல.. நானும் கருக்கல்ல இருந்து தேடுறேன்.. கொஞ்சம் குடுங்க தாத்தா.." என்றாள்.

சிறிது நேரம் யோசித்து விட்டு தன்னிடம் இருந்த தண்ணீர் முழுவதையும் அவளிடம் கொடுத்துவிட்டுக் கிளம்பினார். நேற்றும் இப்படி கிடைத்த நீரை அருகில் அலைந்துகொண்டிருந்த கால்நடைகளுக்கு ஊற்றிவிட்டு அரைக்குடம் தண்ணீரை மட்டுமே எடுத்து சென்றார்.

சென்ற நூற்றாண்டு மனிதர்கள் தண்ணீரின் அருமையை உணராதது அவருக்கு மிகவும் கோபமாக இருந்தது. சுற்றிலும் குப்பைகள் மட்டுமே இருக்கின்றன. நகர்ப்புறங்களில் தண்ணீரை தங்கத்தைக் கொடுத்து வாங்குகின்றார்களாம்.

மனம் வெதும்பிக்கிண்டெ ராமுத்தாய் காலையில் சொன்ன வார்த்தைகளை நினைத்துக நொந்துகொண்டே வேறு இடத்திருக்கு நடந்தார் "யோவ் எப்படியாவது கொண்டு வந்துடுயா.. நேத்து மாதிரி கால்கொடம் தண்ணி கொண்டு வந்தா, நாம தண்ணி இல்லாம விக்கி சாக வேண்டியது தான்.. !!!!"